புனைச் சொற்கள்
பகட்டாய் அலஙகாரம் பெறும்
பனிக்கால உற்சவம்
ஆரம்பமாகிவிட்டது
அணிஅணியாய் ஆயத்தமாகிவிட்டது
நமதருமைக் கலைப் பட்டாளம்
இசையாய் இசைக்கிறது ஒரு கூட்டம்
பாட்டாய் பாடுகிறது ஒரு கூட்டம்
நாட்டியமாடுகிறது ஒரு கூட்டம்
படம் போடுகிறது ஒரு கூட்டம்
நாடகம் நடத்துகிறது ஒரு கூட்டம்
விழா அரங்கிற்குள் விரைந்து சென்று
இளவரசியின் இன்முக தரிசனம் பெற
முண்டியடிக்கிறது ஏகப்பட்ட சேவகர் கூட்டம்.
அவசர அவசரமாய் மூப்பெய்தி
ஓய்வு பெற்ற படைப்பாளர் கூட்டம்
ஆசி வார்த்தைகளை உருட்டித் திரட்டியபடி
முன்வரிசையில் அமர முந்துகின்றனர்.
அழகாய் இல்லாததால்
அவள் எனக்கு
தங்கையாகி விட்டாள் என
இளமையில் எழுதியவன்
மடியேந்திப் புகழ் நாடும்
அவசர முதுமையில்
அழகான தங்கை அமைந்துவிட்டாளென
ஆனந்தக் கூத்தாடுகிறான்.
அன்று அரசிக்குக் கவிதை எழுதி
கணக்கைத் தொடங்கிய
கல்லாப்பெட்டிக் கவிஞன்
இன்று இளவரசிக்கு துதிபாடி
ஏகமாய் குவிக்கிறான்.
இளவரசி சபையில்
கோமாளி வேஷமிட்டு
கூத்தடித்துக் கும்மாளமிடுகிறது
கலை கலையாய்
கலைஞர் கூட்டம்.
அடக்கமாய் அமைதியாய்
மாயச் சாட்டையை
தோளில் துவளவிட்டபடி
சாந்தமாய் வீற்றிருக்கிறாள்
பணிவான இளவரசி.
கலைகள் சங்கமிக்கும்
இளவரசியின் ராஜ்ஜியத்தை வியாபித்து
கலை கலையாய்
அலை அலையாய்
வெளியெங்கும் பரவிச் செல்கிறது
வேஷங்களின் துர்நாற்றம்.
பெருமிதமாய் சுவாசித்து
அகம் மகிழ்கிறாள் இளவரசி.
தனித்திருந்து என் அறையில்
ஆசுவாசமாய் குடித்துக் கொண்டிருந்தாலும்
காற்றைப் பீடித்திருக்கும்
துர்நாற்றத்தை முகர்ந்தபடிதான்
சுவாசித்திருக்கிறேன் நானும்.
நன்றி : மந்திரச்சிமிழ்
No comments:
Post a Comment