Saturday, June 12, 2010

எம்மை அழைக்காதீர் இனம் என்று உரைக்காதீர் - இளம்பிறை

குருதி உறவுகளே கொல்லப்படும் மானுடமே
முள்கம்பி வேலிகளில் முகம் புதைத்து அழுதபடி
எம்மை நினைக்காதீர்

இனம் மொழி எனும் சொல்லை
தேர்தல் மைபோட்டு
தெரியாமல் அழித்துவிட்டு
வீரமும் நேர்மையும்
விலைபேசிக் கொடுத்துவிட்டு
துரோகமும் கபடமும்
பெற்றவர்கள் பிழைப்பதற்கு

எம்மை அழைக்காதீர்
இனம் என்று உரைக்காதீர்

எரியும் உம் உயிர்களின்
இருதிசையும் பிரிந்து நின்று
குளிர்காய்ந்து கொள்வதைத்தான்
கொள்கையெனச் சாற்றுகின்றோம்.
போர்க்களத்தில் நீங்களோ
உயிரை ஆயுதமாய் வீசிடும் தருணத்திலும்-
அரசியற் களத்தின் பேரம் படியாமல்
அல்லாடி நிற்கின்றோம்

எம்மை அழைக்காதீர்
இனம் என்று உரைக்காதீர்

காப்பாற்றக் கூறி கதறுபவர் குரல்வளையை
பாதுகாப்புச் சட்டமிட்டு
மூச்சு முட்ட நெரிக்கின்றோம்
வெள்ளைக்கொடி பிடித்த
வீரர்களைக் கொல்வதற்கு
ஆயுதங்கள் கொடுக்கின்றோம்
ஆளனுப்பி வைக்கின்றோம்.

எம்மை அழைக்காதீர்
இனமென்று உரைக்காதீர்

உலகே எதிர்த்தாலும்
உணர்விழக்கா வல்லினமே
உங்கள் உயிர்கலந்த
உங்கள் உடல் புதைந்த
உங்களின் குருதி
பெருக்கெடுத்துக் கலக்கும் மண்ணில்
உங்களைத்தவிர யார் விளையக்கூடும்
விதையொன்று போட்டால்
சுரையொன்றா முளைக்கும்
எம்மை அழைக்காதீர்
இனம் என்று உரைக்காதீர்

கொன்று குவித்தோரில்
குற்றுயிராய்க் கிடப்போரே
கரம் கேட்டு எழுவதற்குக்
கதறி அழுவோரே
தற்காலிகமாக அங்கே
ஈழம்தான் உமக்கில்லை
எப்போதும் எமக்கிங்கே
ஈன மானம் எதுவுமில்லை
குருதி உறவுகளே
கொல்லப்படும் மானுடமே
முள்கம்பி வேலிகளில்
முகம்புதைத்து அழுதபடி

எம்மை அழைக்காதீர்
இனம் என்று உரைக்காதீர்


நன்றி;
‘தை’ கவிதை மலர்

No comments:

Post a Comment