Saturday, June 12, 2010

மாபலி விருந்து அழைப்பு - மாலதிமைத்ரி

ஆன்றோரே சான்றோரே
பேரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்தது ஒரே துரோகம்

இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்களப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌணர்னமி தினத்தில்
மனித குலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு
அழைக்கிறோம்

அறுக்கப்பட்ட மென்முலைகள் போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்.
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலக தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவர்ஸ்,
ஆண்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ்
அசோஸியேஷன்

குறிப்பு : தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல்நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்து விடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
நன்றி : ஆனந்த விகடன்

No comments:

Post a Comment