Friday, February 4, 2011

மருத்துவர் பினாய்க் சென்னின் துணைவியார் எலிநாசன் மீதான பொய்வழக்கை திரும்பப்பெறு

தமிழ்ப் படைப்பாளிகள் ,உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
29,செய்தியாளர் குடியிருப்பு,திருவான்மியூர்,சென்னை-600041 தமிழ்நாடு.
FEDERATION OF TAMIL CREATIVE WRITERS AND TAMIL LOVERS
29, Journalists Colony, Thiruvanmiyoor, Chennai-600 041, Tamilnadu, INDIA.
email:jpirakasam@gmail.com                                  cell:+919444090186
                                                                                        நாள்: 04-02-2011
மருத்துவர் பினாய்க் சென்னின்
துணைவியார் எலிநாசன் மீதான பொய்வழக்கை திரும்பப்பெறு

பேராசிரியர் இலினா சென் மஹாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் (பெண்களுக்கான மகாத்மா காந்தி  சர்வதேச ஹிந்தி நிகர்நிலை பல்கலைக்கழகம்) உள்ள மகாத்மா காந்தி அந்தர் ராஷ்ட்ரீய விஸ்வ வித்யாலயாவின் பெண்ணியல் ஆய்வுத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பெண்ணியல் ஆய்வுக்கான இந்தியக் குழுமத்தின் ( Indian Association for Women’s Studies) செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties) அகில இந்திய துணைத் தலைவராகவும், சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் செயல்பட்டு வந்த மருத்துவர் விநாயக் கென்னின் மனைவியாவார். பேராசிரியர் இலினா மீது மஹாராஷ்ட்ரா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப்படை   (Anti-Terrorism Squad)  அந்நிய நாட்டவர் சட்டத்தின் ( Foreigners Act) பிரிவு 7, 14 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேராசிரியர் இலினா தலைமையிலான பெண்ணியல் ஆய்வுத்துறையில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் இறுதி நாளில் அதிகாலை 02:30 மணிக்கு காவல்துறை கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கியிருந்த யாதரீ நிவாஸ் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து பீதி ஏற்படுத்திவிட்டு, பேராசிரியர் இலினா மீது மேற்கொன்ன பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டி வழக்குப்பதிந்துள்ளது.

                பாகிஸ்தானிலிருந்தும், வங்காள தேசத்திலிருந்தும்  வார்தாவில் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த நால்வருக்கும், இலங்கையி லிருந்து வருவதாக இருந்தவருக்கும், அரசு விதிமுறைகளின்படி உள்துறையிலிருந்தும், வெளியுறவுத் துறையிலிருந்தும் ஒப்புதல் முன்னதாகவே பெறப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர்களுக்கு நுழைவு அனுமதி  ( Visa )வழங்கபட்டது. வெளிநாட்டவர் நால்வரில் மூவர் பல்கலைக்கழக துணைவேந்தரின் விருந்தினராக அவருடைய இல்லத்திலும், மற்றொருவர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் எந்த முறைகேடும், விதி மீறலும் இல்லை.

                உண்மை இவ்வாறிருக்க பயங்கரவாத தடுப்புப் படை  ( ATS ) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில்  ( FIR )  அந்நிய நாட்டவர் சட்டப்படி பேராசிரியர் இலினா காவல் துறைக்கு படிவம்‡சி ( Form – C ) அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நிய நாட்டவருக்கு தங்கும் வசதியளித்து பொருளீட்டும் ஹோட்டல்கள் அவர்களைக்குறித்த தகவர்களை பதிவுசெய்து காவல்துறைக்கு அளிப்பதற்கான படிவம்தான் படிவம் சி. ஆனால் மேற்சென்ன பெண்ணியல் ஆய்வுத்துறை நடத்திய கருத்தரங்கிற்கு வந்தவர்களில் ஒருவருமே ஹேட்டல்களில் தங்கவைக்கப்டவில்லை. முறையான உள்துறை, வெளியுறவுத்துறை ஒப்புதலுடன் அவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எனவே இது பேராசிரியர் இலினா மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவுசெய்து சிறைக்கு அனுப்பச் செய்யப்படும் சதிதான் என்பது சிறு குழந்தைக்கும் விளங்குமே!
                வார்தாவின் ஓர் ஒதுக்குப்பறமான பகுதியில் மகளிருக்கான பல்கலைக்கழகத்தில் அமைதியாகப் பணிபுரிந்து வரும் இலினா உடல் நலமில்லாதவர், புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருபவர். செய்யாத குற்றத்திற்காக கணவர் விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது இவர் என்ன கூறினார் தெரியுமா? “என் குடும்பத்தின் மீதுஇடி விழுந்துவிட்டது. எங்கள் துயரம் சொல்லவெண்ணாதது. ஆனால் நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அதைவிட துயரமாக இருக்கிறது.ஆயுள் தண்டனை விதிக்கும் படி மருத்துவர் விநாயக் சென் செய்த குற்றம்தான் என்ன?

                மருத்துவர் விநாயக் சென் கற்ற கல்வியைக் காசாக்காமல் ஏழை மக்களுக்கு காலம் முழுதும் மருத்துவத் தொண்டாற்றிய மனித நேயமிக்கவர். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் குழந்தை நல மருத்துவப்பட்ட மேற்படிப்பு படித்தவர். எளிய கிராமப்புற உழைக்கும் மக்களின் உடல் நலனைக்காக்கும் பணியை விரும்பி ஏற்ற இவர் வறுமையும் நோயும் சமூகத்தில் சேர்ந்தே இருப்பதைக் கண்டு மனம் நொந்து போனார். அதனைப்போக்கும் வழிகளைக் கண்டறிய பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஏழைக் குழந்தைகளிடம் உள்ள ஊட்டசத்துக் குறைவே பலவித நோய்களுக்கும் காரணம் என்று கூறிய இவர், சமூகத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோர் நோய்களிலிருந்து விடுபடுதல் இயலாது என்பதை உணர்த்தினர்.

                …சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா க்ஷ் என்ற சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சங்கர் குகா நியோகியுடன் தொடர்பு கொண்ட சென், சுரங்கத் தொழிலாளர்களுக்கான எளிய மருத்துவமனையில் பணியாற்றினார். கடும் வறுமையும் நோயும் விரவிக் கிடக்கும் மத்திய இந்தியாவின் காட்டுப் பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி 30 ஆண்டுகாலம் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ளார். கூடவே தனது ஆய்வுகளையும் தொடர்ந்துள்ளார். ஆஷாஎன்ற கிராமப்பற மருத்துவத் தாதியர் திட்டம் உள்பட கிராமப்புற மக்களும், பழங்குடி மக்களும் அடிப்படை மருத்துவ வசதி பெறுவதற்கான பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் பெரும்பங்காற்றியுள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல உலகப் பகழ் வாய்ந்த லான்செட்’  (Lancet ) உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி ஏடுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மலேரியா போன்ற கொடிய நோய்களோ, குறைந்த ஊதியமோ, வசதிகள் அற்ற வாழ்நிலையோ இவரது பணியைப் பாதித்ததில்லை. சமனற்ற சமூகத்தில் தண்டிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரும் முயற்சியில், மருத்துவ உதவி வட்டம் ( Medico Friends Circle )  நிகழ்த்திய விவாதங்களில் இவர் பங்கேற்றார். நெருக்கடி நிலைக்காலத்தில் ஜெயப் பிரகாஷ் நாராயண் தோற்றுவித்த மக்கள்சிவில் உரிமைக் கழகத்தில் இணைந்து தமது சமூகக் கடமைகளை மேலும் விரிவுபடுத்திக்கொண்டார்.

                ஒருபுறம் நாடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுவதாக அரசு மார்தட்டிக் கொள்ளும்போது, மறுபுறம் நாட்டின் 40 விழுக்காடு மக்கள் பழங்குடி மக்கள் உணவுக்கும் மருந்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் வழியில்லாத பராரிகளாக இருப்பதைக் கண்டு பெரும் கவலையுடன் பேசியும் எழுதியும் வந்தார் விநாயக் சென். ஆண்டுதோறும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும், பழங்குடி மக்கள் மேலும் வறுமையிலும் நோயிலும் தள்ளப்பட்டு வருவதும், அவர்தம் குழந்தைகள் சத்துக்குறைவால் ஆயிரக்கணக்கில் இறந்து போவதும் ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
பழங்குடி மக்களுக்கும் இந்திய மண்ணின் மைந்தர்களாக உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் உண்டு என்று வாதாடினார். சத்தீஸ்கர் மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளராக மக்கள் பக்கம் நின்று போராடினார்.

                இதுவே மருத்துவர் விநாயக் சென்  கலகக்காரர் என்று அடையாளம் காணப்படக் காரணமாயிற்று. சுரங்கத் தொழிலாலும், நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டதாலும் தமது வாழ்வாதாரமான நிலங்களை இழந்த மக்கள் அமைப்பாக ஒன்று திரண்டு தமது வறுமை நிலையின் காரணங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு விநாயக் சென், இலினா சென் இவ்விருவரது பணியினால் உண்டானது.  தமது உரிமைக்காக குரல் எழுப்பிய பழங்குடி மக்களை ஒடுக்க சல்வா ஜுடும்உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளையும், பல்வேறு ஆயுதப்படைகளையும் மாநில அரசே ஊக்குவித்தது. அடுத்தடுத்து தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கென நிலங்களையும் கனிம வளங்களையும் அரசு தாரை வார்த்தபோது மக்களின் எதிர்ப்பும், அதனை ஒடுக்க சல்வா ஜுடும் உள்ளிட்ட கூலிப்படைகளின் அழித்தொழிப்பும் தொடர்ந்தன. சத்தீஸ்கர் பழங்குடியினரின் போராட்டம் சுடர்மையடைந்து இன்று இந்திய அரசு அங்கு ரானுவத்தைக் குவித்து, தனது சொந்த மக்களையே வேட்டையாடி வருகிறது.  வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு கார்ப்பரே¼ட் கொள்ளைக்கு லட்சக்கணக்கான பழங்குடி மக்களை பலிகொடுக்கும் இந்திய அரசு, அம்மக்களின் அறியாமை இருளை நீக்கிய அன்பும் அருளுமிக்க விநாயக் சென் போன்ற சூரியனை எப்படிப் பிரகாசிக்க விடும்? எனவேதான்  பயங்கரவாத ஆதரவாளர் ’ ‘தேசத்துரோகிஎன்று குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

                அந்த அநியாயமான வழக்கில் கைதாகும்வரை மருத்துவர் சென் மீது எந்தவித குற்றச்சாட்டும் வழக்கும் இருந்ததே கிடையாது. அது மட்டுமல்ல அவரது தன்னலமற்ற மருத்துவசேவை சர்வதேச அளவில் பாராட்டும் பதக்கங்களும் பெற்றுத் தந்திருக்கிறது. அவர் ஏழை மக்களுக்கு ஆற்றிய மகத்தான மருத்துவ சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமே அவர் யாரென்று அடையாளம் காட்டும் சான்றாகும்.

1.    வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழங்கிய வாழ்நாள் சேவைக்கான பால் ஹாரிசன் விருது 2004’.

2.    சமூக அறிவியலுக்கான இந்திய கழகம் (Indian Academy of Social sciences) இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிஎன்று சிறப்பித்து வழங்கிய ஆர்.ஆர்.கீத்தன் தங்கப்பதக்கம் 31.12.2007 இந்த வருதுப் பத்திரம் விநாயக் சென்னைப் பற்றிக் கூறியது இதோ:

                “இயற்கை மனிதன் சமூகம் தொடர்பான அறிவியலின் முன்னேற்றத்திற்கும், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கும்இவர் ஆற்றியுள்ள நேர்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஈடில்லாத சேவையைப்பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. அவரது தியாகமும் அபாயங்களைப் பொருட்படுத்தாத பொதுநலச் செயல்பாடும் மக்களுக்கும் பிற விஞ்ஞானிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழும்.
               
3.     “உலக நல்வாழ்வுக்கும் மனித உரிமைகளுக்குமான ஜொனாதன் மான் விருது 2005”. இந்த விருதுப்பத்திரம், “ஏழை மக்கள் சமூகங்களில் பொறுப்புணர்வுமிக்க மருத்துவர் எந்தளவு மக்கள் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது
மருத்துவர் விநாயக் சென்னின் சேவை. ஏழை சுரங்கத் தொழிலாளர்களின் கூலிப்பணத்தில் உருவாக்கப்பட்ட எளிய மருத்துவமனையில் தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு அடிப்படை அறிவையும் உடல் நலம் பேணுவதற்கான வாழக்கை முறையையும் மனித உரிமைகளையும் கற்பிப்பதில் அவர் செலவிட்டு வந்துள்ளார். பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களின் உயிரிழப்பைத் தடுக்கவும், வாழ்நிலையை மேம்படுத்தவும் கற்பித்துள்ளார். அவரது பங்களிப்பு இந்தியாவுக்கும் உலக நல் வாழ்வுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றால் தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்துமில்லை என்பது உறுதி”. என்று கூறுகிறது.


                இவற்றில் எண் (1) ல் குறிப்பிட்ட பால் ஹாரிசன் விருது 2004 தவிர மீதியுள்ள ரண்டும் இவர் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு வழங்கப்பட்டவை என்பதும் இந்தியாவில்  ஜொனாதன் மான் சர்வதேச விருதுபெற்ற ஒரே மருத்துவர் விநாயக் சென் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

                இடையே விநாயக் சென் 14052007 அன்று பிலாஸ்பூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும், ஏழுத்தாளர்களும் கல்வியாளர்களும், கவிஞர்களும் அவரது விடுதலைக்கு குரல் கொடுத்தனர். சிறையிலிருந்த நக்சலைட் தலைவர் நாராயண் சன்யால் தொழிலதிபர் பியூஷ் குஹ என்பவருக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் தூதுவராக செயல்பட்ட விநாயக் சென்னுக்கு நக்சலைட் தொடர்புடையவர்என்று அவர்மீது முத்திரைகுத்தப்பட்டது. இவர் கைது செய்யப்பட்ட மறுநாள் இவரது வீடும் சோதனை செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் மூன்று ஆதாரங்கள் காட்டப்பட்டன.

1.       ராய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து திரு நாராயண் சன்யால் வழக்கு குறித்தும் உடல் நலம் குறித்தும் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதம்.

2.      ‘ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மக்கள் யுத்தம் ) மவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் ஆகியவற்றின் இணைவு குறித்துஎன்ற கட்டுரை.

3.       மதன்லால் பஞ்சாரே என்ற சி.பி.ஐ. ( மாவோயிஸ்ட் ) தோழர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதம்.

                70 வயதான நாராயண் சன்யாலை உடல் நலம் பற்றி விசாரிக்க ஒன்றரை ஆண்டுகளில் 33 தடவை சிறைக்காவலர் முன்னிலையில் முறையான ஒப்புதலுடன் 58 வயது விநாயக் சென் சந்தித்துள்ளார். மேற்சொன்னவற்றை ஆதாரமாகக் கொண்டு ஏற்கனவே தனிமைச் சிறை உள்பட கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் அநியாயமாக சிறையில் கழித்தவருக்கு 24122010 அன்று சத்தீஸ்கர் சொ­ன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த அநீதி போதாதென்று இப்போது நோயாளியான அவரது மனைவியையும் பொய்க் குற்றச்சாட்டுகளைக்கூறி கைது செய்ய முயலுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

                அடிப்படை வாழ்வுரிமைகளைக் கோருமாறு மக்களுக்கு அறிவு புகட்டிய விநாயக் சென் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மனைவி பேராசிரியர் இலினா, செய்யாத தவறுக்காக வேண்டுமென்றே வழக்கில் சிக்கவைக்கப்படுகிறார். அன்று பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகப் பேசியவர்கள் தேச பக்தர்கள் என்று அழைக்கபட்டார்கள். இன்றைய இந்தியாவில் இந்திய அரசைக் கேள்வி கேட்போர் தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி சிறைப்படுத்தப்படுகிறார்கள்.

                அரசின் இந்த பயங்கரவாதப்போக்கை படைப்பாளிகளான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறை தொடருவது இந்தியாவில் இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் இருப்பதையே நிரூபிக்கிறது. தகுந்த ஆதாரங்களுடன் முறையாக வாதிட்டு மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மருத்துவர் விநாயக் சென் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளார். அதனை ஏற்று இந்திய அரசு மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத்தலைவரும்சத்தீஸ்கர் மாநிலச் செயலருமான மருத்துவர் விநாயக் சென்னை நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும், அவர் மனைவி பேராசிரியர் இலினா மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழ் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

ஒப்பம்: ப. செயப்பிரகாசம் , அமரந்த்தா , கவிஞர் இன்குலாப், ராஜேந்திரசோழன்,
பேராசிரியர் சரஸ்வதி.

No comments:

Post a Comment