கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப்
புறக்கணிப்போம்! தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் (02.09.2010 சென்னை செய்தியாளர் சந்திப்பு -
செய்திக்குறிப்பு)
எதிர் வரும் 2011 ஆம் ஆண்டு சனவரி 5, 6, 7, 8 தேதிகளில் கொழும்புவில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த
இருப்பதாக சில எழுத்தாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 3ல் கொழும்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
அங்குள்ள சிலரும், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் கூடி, இந்த மாநாட்டை நடத்த முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கூட்டுச் சதியோடு இலங்கை அரசு
கடந்த ஆண்டு மாபெரும் தமிழின
அழிப்புப் போரை நடத்தி எண்ணற்ற போராளிகளையும் அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தது உலகெங்கும்
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசப் போர் நெறிமுறைகளையும் போர்க்
கைதிகள் தொடர்பான
ஒப்பந்தங்களையும் மீறி
இலங்கை அரசு சிங்கள இனவெறியோடு தமிழினத்தின் மீது தொடுத்த தாக்குதல்களுக்கும் நிகழ்த்திய
கொடூரங்களுக்கும் எதிராக வெகுண்டெழுந்த
உலக நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு எதிராகப்
பொருளாதாரத் தடை
விதித்துள்ளது. ஐ.நா
அமைப்பின் பொதுச் செயலாளரும் ஐ.நா அமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாட்டின் தலைவர்களும்
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழின அழிப்புப் போரை நடத்திய இலங்கை அரசு
உலக நாடுகளின்
குற்றச்சாட்டுகளிலிருந்து
மீளவும் தமிழ் மக்களின் கோபத்தைத் தணிக்கவும் இந்தியத் திரைப்பட விழா ஒன்றை கடந்த ஜூன் 3, 4, 5 தேதிகளில் கொழும்புவில் நடத்தி தமிழ்த் திரையுலகையும் கொழும்புவுக்கு
வரவழைத்து தான்
தமிழினத்துக்கு
எதிரியல்ல என்று காட்டிக் கொள்ள முயற்சித்தது.
ஆனால் தமிழ்த் திரையுலகம் அந்த விழாவைப்
புறக்கணித்ததுடன்,
இந்தியாவின் பிற மொழி பேசும் திரையுலகினரையும் அந்த
விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள, கொழும்பு
இந்தியத் திரைப்பட விழா படுதோல்வியில் முடிந்தது.
இப்படிப் படுதோல்வியில் முடிந்த அந்த
நிகழ்வையடுத்து தற்போது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்புவில் நடத்தி தன் கைகளில் உறைந்துள்ள ஒரு லட்சம் தமிழரின் ரத்தக்கறையை மறைக்க
முயற்சிக்கிறது இலங்கை அரசு. தன் கோர முகத்தை நேரடியாக வெளிக்காட்டாமல், எழுத்தாளர்கள் என்கிற முகமூடியுடன் இந்த மோசடியில் அது இறங்குகிறது.
எனவே எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்தில்
இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது
என்பதைத் தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நாடுகள் கடந்து மொழி இன வரம்புகள் கடந்து
மானுடத்தை உள்ளன்போடு நேசிப்பவர்கள்
படைப்பாளிகள்,
மனிதநேயச்
சிந்தனையாளர்கள்,
கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களாகிய நாம். அதேபோல உலகின்
எந்த மூலையில் மனித உரிமை மறுக்கப்பட்டாலும்
மனித குலம் தாக்கப்பட்டாலும் அதைக் கண்டித்துக் குரல் கொடுக்க - ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடக் கடமைப்பட்டவர்கள் நாம்.
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடும்
தாக்குதல்களையும்,
அதன் உச்சமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட
படுபயங்கர கோரப் படுகொலைகளையும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இப்படிப்பட்ட சிங்களக் கொடுங்கோல் அரசுதான், அம்பலப்பட்டுப் போய்க் கண்டனத்திற்குள்ளாகியிருக்கும் தன் கோர முகத்துக்கு இந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்
மாநாட்டின் மூலம் சனநாயக,
தமிழ்ப் பாச, தமிழ் நேச அரிதாரம் பூசிக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
இந்நிலையில் இலங்கை அரசின் இப்படிப்பட்ட
முயற்சிகளுக்கு எந்த நிலையிலும் துணை போகமாட்டோம் என்று அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறோம்.
ஓர் இனம் அரசியல் ரீதியான விடுதலை அடையாமல், தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைப் பெறாமல், சுதந்திரமான எந்த வளர்ச்சியும் அடைந்ததாக வரலாறு கிடையாது.
எனவே இலக்கிய வளர்ச்சி, மொழி வளர்ச்சி, திரைக்கலை வளர்ச்சி என்று போக்குக் காட்டி படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும் கலைஞர்களை ஈர்க்க முயலும் சிங்கள அரசின் நயவஞ்சக எண்ணத்தைப்
புரிந்துகொண்டு,
உலகெங்கும் வாழும்
தமிழர்கள் இந்தப் போலிப் பகட்டு மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! வணக்கம்.
இப்படிக்கு,
1.இராசேந்திர சோழன் (மண்மொழி இதழ் ஆசிரியர்)
2.பா.செயப்பிரகாசம்
3.காசி ஆனந்தன்
4.மணிவண்ணன் (திரைப்பட இயக்குநர்)
5.ஓவியர் வீரசந்தானம்
6.பா.ஏகலைவன்
7.பத்திரிக்கையாளர் சோலை
8.வ.கௌதமன் (திரைப்பட இயக்குநர்)
9.அறிவுமதி
10.புகழேந்தி தங்கராஜ்
11.தியாகு
12.தாமரை
13.புலமைப்பித்தன்
14.வெ.சேகர் (திரைப்பட இயக்குநர்)
15.சுதாங்கன்
16.தெ.சீ.சு.மணி (பத்திரிக்கையாளர்)
17.ஆர்.சி.சக்தி (திரைப்பட இயக்குநர்)
18.ஜெயபாஸ்கரன்
19.ஓவியர் அரஸ்
20.குணசேகரன் (பத்திரிக்கையாளர்)
No comments:
Post a Comment