Wednesday, August 17, 2011

மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் அறிக்கை.

மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது  என அனைவரும் அறிவோம்.மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ,சமூகத்துக்கோ.அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிற போது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ் வகையில் நியாயம்?  நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன.காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

மேற்கு வங்கத்தில் 2000 த்தில்  கடைசியாய் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1995-க்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றப்  படவில்லை.இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன்,சாந்தன் ,முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள்.வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப் பட்டிருந்தால்  கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும்.எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்-------
இந்திய அரசே -மரண தண்டனையை ரத்து செய்.

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் -உள்ளிட்ட அனைவரது மரண தண்டனையையும் கால அளவைக் கணக்கில் எடுத்து ரத்து செய் !
என்ற முறையீட்டை முன்வைத்து நடுவணரசை  வலியுறுத்த  தங்கள் ஒப்புதலைக் கோருகிறோம் .அனைவரின் ஒப்புதலும்  அரசுக்கு அனுப்பி வைக்கப் படும்.
மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழு.
---------
பொன்னீலன், புவியரசு, ஈரோடு  தமிழன்பன், இன்குலாப். இராசேந்திரசோழன், பா.செயப்பிரகாசம், தாமரை,
ஓவியர் மருது, மாலதிமைத்ரி.
ஒப்புதல் அளிக்கும் மின்னஞ்சல் : jpirakasam@gmail.com , s.tamarai@gmail.com